தங்கள் நாட்டுக்கு எதிரான கொள்கைளுடன் ஒத்துப்போகும் பிரிக்ஸ் நாடுகளுக்கு கூடுதலாக 10வீத வரி விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் நாடுகள் கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்ப்பின் பதில் வரி நடவடிக்கைக்கு மறைமுகமாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தங்களுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர்களுக்கு 10வீத கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும் யாரும் இதில் தப்ப மாட்டார்கள் என்றும் ட்ரம்ப் தனது சமூக தளத்தில் தெரிவித்தார்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய 4 நாடுகளும் இணைந்து பிரிக்ஸ் அமைப்பை தொடங்கிய நிலையில் பின்னர் அதில் தென்னாப்ரிக்காவும் அதைத் தொடர்ந்து எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு இராஜியம், இந்தோனோசியா ஆகிய நாடுகளும் இணைந்து கொண்டன.
தற்போது உலகின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பில் 44 சதவீதத்தையும் மக்கள் தொகையில் 56 விழுக்காடு பங்கையும் பிரிக்ஸ் நாடுகள் கொண்டுள்ளன.
அமெரிக்க டொலருக்கு மாற்றாக பொது நாணயத்தை உருவாக்க இந்த அமைப்பு முயற்சி செய்வதை ஜனாதிபதி ட்ரம்ப் வெளிப்படையாகவே கண்டித்திருந்தார்.
இந்நிலையில் பதில் வரிக்கு எதிர்ப்பு தெரிவித்ததும் பிரிக்ஸ் மீதான ட்ரம்ப்பின் கோபத்தை அதிகரித்துள்ளது.